தர்மபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

Update: 2022-11-13 18:45 GMT

தர்மபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பரவலாக மழை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அணைகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. மேலும் இந்த கனமழையால் ஏராளமான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது. பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி வெளியேற்றப்படும் உபரிநீரால் மாவட்டத்தில் உள்ள 25-க்கு மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உள்ளது.

ராமாக்காள் ஏரி

கடந்த 25 ஆண்டுகளாக வறண்டு கிடந்த சோகத்தூர் ஏரி தற்போது நிரம்பி உள்ளது. மேலும் உபரி நீர் வந்து கொண்டிருப்பதால் மாவட்டத்தில் உள்ள மேலும் சில ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் அந்தபபகுதியில் உள்ள கால்வாய்களை பொதுமக்களே தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று தர்மபுரி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நகரையொட்டி உள்ள ராமாக்காள் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாளில் ஏரி நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தர்மபுரி நகரை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஏரிக்கு வரும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையால் கலெக்டர் அலுவலகம், இலக்கியம்பட்டி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது.. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். அழகாபுரி குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியதால் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 106.20 மில்லி மீட்டர் மழை பெய்தது. தர்மபுரியில் 5 மில்லி மீட்டரும், பாலக்கோட்டில் 16.40 மில்லி மீட்டரும், மாரண்டஅள்ளியில் 22 மில்லி மீட்டரும், பென்னாகரத்தில் 18 மில்லி மீட்டரும், ஒகேனக்கல்லில் 20.80 மில்லி மீட்டரும், அரூரில் 14 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்