கனமழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்

திருவாடானை தாலுகா, மங்கலக்குடி பிர்காவில் மழையின் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2022-10-22 17:44 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா, மங்கலக்குடி பிர்காவில் மழையின் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நெற்பயிர் சாகுபடி

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுவது திருவாடானை தாலுகாவில் உள்ள மங்கலக்குடி பிர்கா தான். திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு சுமார் 26 ஆயிரத்து 710 எக்டேர் நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி நடைபெற்று உள்ளது.

இதில் மங்கலக்குடி பிர்காவில் மட்டும் சுமார் 8 ஆயிரத்து 400 எக்டேர் நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வார காலமாக இந்தபகுதியில் பெய்த கன மழையால் கூகுடி, ஆண்டாவூரணி, பாகனூர் ஊராட்சி களில் உள்ள கிராமங்களில் பெரிய அளவில் விளை நிலங் களில் தண்ணீர் தேங்கி விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

சிரமம்

இதேபோல இந்த பகுதியில் மங்கலக்குடி பிர்கா முழுவது மாக கன மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. கன மழையால் இந்த பகுதியில் உள்ள மணலூர், கிடங்கூர் போன்ற சிறிய கண்மாய்கள் நிரம்பி உள்ளன. மேலும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளும் நிரம்பி உள்ள நிலையில் நஞ்சை, புஞ்சை நிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் முழுமையாக நீரில் மூழ்கி உள்ளது. வயல்களில் நிரம்பி உள்ள தண்ணீரை வடிக்க விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தண்ணீர் சூழ்ந்தது

இதுகுறித்து பாகனூர் கிராம விவசாயி அருண்பாண்டியன் கூறியதாவது:- பாகனூர் கண்மாய் தூர்வாரப்படாததால் கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதியில் பெய்த கனமழையில் பாகனூர் கண்மாய் நிரம்பிவிட்டது. இதனால் விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதன் காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற வழியில்லாமல் உள்ளது.

இதனால் பயிர்கள் முழுமையாக சேதமடைந்து வருகிறது. இதேபோல் பாகனூர் ஊராட்சியை சேர்ந்த பேராமங்கலம் தாதகன்கோட்டை, மணலூர் கிராமங்களிலும் கன மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயம் முழுமையாக பாதிப்படைந்து உள்ளது.

கூகுடி ஊராட்சி அந்திவயல் கிராமம் ராதா: கூகுடி ஊராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இப் பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பியுள்ள நிலையில் கண்மாயின் உள்வாய் பகுதியில் உள்ள புஞ்சை விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் பாதிப்படைந்து உள்ளது.

அழுகும் நிலை

இதேபோல் நஞ்சை நிலங்களில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்ற முடியாமல் பெரிதும் சிரமங்களை சந்தித்து வருகிறோம். வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றினால் தான் அடுத்த கட்ட விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும். பயிர்கள் இளம் பயிராக இருப்பதால் அழுகிவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களை எடுத்தல் போன்ற விவசாய பணிகள் முழுமையாக முடங்கி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்