ஒருதலைக்காதல் சுவாதி..சுவேதா..சத்தியபிரியா...! கொலைக்களமாகும் ரெயில் நிலையங்கள்
கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் ஒரு தலைக்காதல் விவகாரத்தால் ராம்குமார் என்ற வாலிபரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சென்னை
அம்மா போய் வருகிறேன் என்று தோளில் புத்தக பையை மாட்டிக்கொண்டு தோளுக்கு மேல் வளர்ந்து நின்ற மகள் டாடா காட்டி விட்டு வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றதை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த தாய் ராமலட்சுமி மகளின் தலை மறைந்ததும் வீட்டுக்குள் சென்று விட்டு வேலைகளில் மூழ்கினார்.
போய் வருகிறேன் என்று சொல்லி சென்ற மகள் ஒரேயடியாக போக போகிறாள் என்பது பெற்ற மனசுக்கு தெரியவில்லை. மிடுக்கான நடையும், எடுப்பான தோற்றமும், கம்பீரமும் கொண்ட மகளும் தன்னை போல் போலீசுக்கும் தகுதியாக இருப்பாள் என்று மனசுக்குள் கணக்கு போட்டிருந்த ஏட்டு ராமலட்சுமி மகள் கல்லூரி படிப்பை படிக்கட்டும் அதன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தனக்கு தானே சமாதானமும் ஆகியிருக்கிறார்.
ஆனால் பாழாய் போன காதல் வரும். எமன் வடிவில் சதீஷ் வருவான் என்று நினைத்து இருக்கவில்லை.
உன் மகளை கொன்று விட்டார்கள் என்று பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து பறந்து வந்த தகவலை கேட்டு பதறியடித்து கொண்டு ஓடினார் ராமலட்சுமி.
தண்டவாளத்தில் தலை துண்டித்து பிணமாகி கிடந்த மகளின் உடலை பார்த்து கதறியது அங்கிருந்த பயணிகளை மட்டுமல்ல பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரையும் கண்ணீர் விட வைத்தது.
பாவி... என் மகளை இப்படி அநியாயமாக கொன்று விட்டானே என்று கதறி துடித்த அந்த தாயை ஆறுதல்படுத்த முடியவில்லை. தாயை மட்டுமல்ல... அந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒவ்வொருவரும் உறைந்துதான் போனார்கள்.
ரெயில் நிலையங்களை கொலைக்களமாக மாற்றி வருவது இது முதல்முறை அல்ல...!
சென்னை ரெயில்நிலையங்களில் கல்லூரி மாணவிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. சம்பவம் நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பது போல பாவனை செய்யும் ரெயில்வே நிர்வாகம், அதன்பின்னர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். இதை கொலையாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் ஒரு தலைக்காதல் விவகாரத்தால் ராம்குமார் என்ற வாலிபரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
ஐ.டி. நிறுவன வேலைக்கு சென்ற சுவாதி ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள் கடந்த ஆண்டு (2021) தாம்பரம் ரெயில்நிலையத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த சுவேதா என்ற நர்சிங் கல்லூரி மாணவி, ராமச்சந்திரன் என்ற வாலிபரால் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். ராமச்சந்திரனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த 2 கொடூர சம்பவங்களும் பயணிகள் நடமாட்டம் அதிகம் உள்ள ரெயில்நிலைய பகுதியில் நடந்ததுதான் பெரிய கொடுமை.
பரங்கிமலை ரெயில்நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியப்பிரியா காதலன் சதீஷால் கொடூரமாக ரெயிலில் தள்ளி கொல்லப்பட்டுள்ளார். இதனால் ரெயில்நிலையங்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த கொடூர சம்பவங்கள் இனிமேலாவது நடைபெறாமல் தடுக்க வேண்டியது ரெயில்வே போலீசின் கடமை.