சேலம் அணைமேட்டில் மினிலாரி மோதி 'ரெயில்வே கேட்' சேதம் போக்குவரத்து பாதிப்பு

சேலம் அணைமேட்டில் மினிலாரி மோதி 'ரெயில்வே கேட்' சேதம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-04 20:23 GMT

சேலம்

சேலம் அணைமேட்டில் மினி லாரி மோதி ரெயில்வே கேட் முறிந்து சேதம் அடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ரெயில்வே கேட்

சேலம் டவுன் ரெயில் நிலையம் வழியாக விருத்தாச்சலம், காரைக்கால், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போன்று சரக்கு ரெயில்களும் சென்று வருகின்றன. சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகில் அணைமேடு பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக ரெயில்கள் வந்து செல்லும் போது ரெயில்வே ஊழியர்கள் கேட்டை மூடி, திறப்பது வழக்கம்.

அதன்படி நேற்று காலை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து டவுன் ரெயில் நிலையம் வழியாக விருத்தாசலத்திற்கு செல்லும் பயணிகள் ரெயில் காலை 9.50 மணிக்கு புறப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அணைமேடு ரெயில்வே கேட்டை மூடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் கேட் மெதுவாக கீழே இறங்கி கொண்டு இருந்தது.

சேதம் அடைந்தது

அப்போது தண்டவாளத்தின் இருபுறங்களிலும் கேட் மூடப்படுவதற்குள் தண்டவாளத்தை கடந்து விடலாம் என்ற எண்ணத்தில் வாகன ஓட்டிகள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை வேகம், வேகமாக ஓட்டிச்சென்றனர்.

அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற ஒரு மினிலாரி ரெயில்வே கேட் மீது மோதியது. இதில் ரெயில்வே கேட்டில் உள்ள கம்பம் முறிந்து சேதம் அடைந்தது. இதனால் ரெயில் செல்வதற்கு சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் காலை 10 மணிக்கு விருத்தாச்சலம் பயணிகள் ரெயில், டவுன் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பழுதான கேட் சரி செய்யப்பட்டது.

பின்னர் 30 நிமிடம் தாமதமாக காலை 10.30 மணிக்கு விருத்தாச்சலம் ரெயில் புறப்பட்டு சென்றது. மேலும் அணைமேடு வழியாக தினமும் ஏராளமான பஸ், கார்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

டிரைவர் கைது

இந்த நிலையில் ரெயில்வே கேட் பழுதாக காரணமாக இருந்த மினி லாரி டிரைவரான வாழப்பாடி துக்கியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 22) என்பவரை ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்