அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்க ரெயில்வே வாரியம் முடிவு

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு பதிலாக டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

Update: 2022-06-05 00:52 GMT

நாகர்கோவில்,

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில், நெல்லை வழியாக சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த ரெயிலானது நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் என்ஜின் மாற்றம் செய்யப்பட்ட பிறகு புறப்பட்டு செல்லும். இதனால் சுமார் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்கள் வரை தாமதம் ஆகி வந்தது. எனவே நேரம் வீணாவதை தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

இந்த நிலையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இனி நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வராமல் பைபாஸ் வழியாக அதாவது நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 40 நிமிடங்கள் வரை பயண நேரம் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இனி வழக்கம் போல இரவு 8.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். ஆனால் காலை 9 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வருவதற்கு பதிலாக இனி காலை 8.05 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கு வரும். தொடர்ந்து காலை 10.35 மணிக்கு திருவனந்தபுரம் செல்வதற்கு பதிலாக காலை 9.30 மணிக்கே திருவனந்தபுரம் சென்று 9.35 மணிக்கு புறப்படும். பகல் 12.10 மணிக்கு பதில் 11.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

இதே போல மறு மார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு மாலை 3 மணிக்கு பதில் 3.40 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். பின்னர் 6.10 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கு வரும். இந்த ரெயில் தற்போது 5.45 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து 5.55 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறது.

அனந்தபுரி ரெயில் 40 நிமிடங்கள் முன்னதாகவே கொல்லம் செல்கின்ற போதிலும் வழக்கமான நேரத்தைவிட 40 நிமிடங்கள் தாமதமாக கொல்லத்தில் இருந்து புறப்படுகிறது. ரெயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ கால அட்டவணையை மாற்ற அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்