2 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு ரெயில்

2 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு நேற்று ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;

Update:2022-05-31 21:23 IST

தென்காசி:

செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படாமல் இருந்தது. கொரோனாவுக்கு முன்பு தினமும் 4 முறை செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கும் இயக்கப்பட்டு வந்த இந்த பயணிகள் ரெயில், கொரோனாவுக்கு பின்னர் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டது.தற்போது நெல்லை - செங்கோட்டை இடையே நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கும், மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து மாலை 5.50 மணிக்கும் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் பழையபடி 4 முறை ரெயிலை இயக்க வேண்டும் என்றும், இதனால் வீரவநல்லூர், சேரன்மாதேவி, அம்பை, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, தென்காசி பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் தெற்கு ரெயில்வே சார்பில் செங்கோட்டை-நெல்லை பயணிகள் ரெயில் (06662) காலை 6.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, காலை 8.50 மணிக்கு நெல்லைைய சென்றடையும் வகையிலும், மறுமார்க்கத்தில் நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரெயில் (06657) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும் வகையிலும் இயக்கப்படும் என்று என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி செங்கோட்டையில் இருந்து நேற்று முதல் இந்த ரெயில் இயக்கப்பட்டது. தென்காசி ரெயில் நிலையத்தில் அந்த ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜா, பழனி நாடார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகரசபை தலைவர் சாதிர், துணைத்தலைவர் சுப்பையா, ெரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் வெங்கடேஸ்வரன், நகர தி.மு.க. பொருளாளர் ஷேக் பரீத் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் மாலை நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டை - நெல்லைக்கு இடையே ரெயில் இயக்கப்படும் முறை அதிகரிக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்