காரைக்குடியில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

காரைக்குடியில் அமலாக்கத்துறையினர் 2 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2023-06-07 18:45 GMT

காரைக்குடியில் அமலாக்கத்துறையினர் 2 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

சட்ட விரோத பண பரிவர்த்தனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 40). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவர் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி சிங்கப்பூர் அரசு அவரது பாஸ்போர்ட்டினை முடக்கி இந்தியாவிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தியா திரும்பிய சாகுல் ஹமீதிடம் திருச்சி விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து 3 முறை டெல்லிக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதிரடி சோதனை

இந்தநிலையில் நேற்று அதிகாலை மத்திய அமலாக்கத்துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தில் உள்ள சாகுல் ஹமீது வீடு மற்றும் செஞ்சையில் உள்ள அவரது மாமனார் முகமது அலி ஜின்னா வீடு ஆகியவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வங்கி கணக்குகள், வங்கி பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர், அவரது செல்போன்கள், கம்ப்யூட்டர் பதிவுகள் மற்றும் சில ஆவணங்கள், டைரிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் சாகுல் ஹமீதை அமலாக்கத்துறையினர் மேல்விசாரணைக்காக அவர்களோடு அழைத்து சென்றதாகவும் தெரியவருகிறது. காரைக்குடியில் நடந்த இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின்போது காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்