ராகுல்காந்தியின் நடைபயணம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தரும்
ராகுல்காந்தியின் நடைபயணம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
ராகுல்காந்தியின் நடைபயணம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மருத்துவ முகாம்
ஆர்.ஜெ.தமிழ்மணி கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை பசுமலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கண் சிகிச்சை மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அதில் அறக்கட்டளை நிறுவனர் ஜெயந்தி ராஜூ, கணேஷ் பிரபு, ரம்யா கணேஷ் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது மகன் பெயரிலான ஜெ.தமிழ்மணி கல்வி அறக்கட்டளையை எனது மனைவி ஜெயந்தி ராஜூ நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை சார்பில் மாதம்தோறும் ஒவ்வொரு வார்டிகளிலும் பொது மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். அதில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகிறோம். இதுவரை 4 ஆயிரம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை, பல ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடி, 5 ஆயிரம் பேருக்கு பல் சிகிச்சை மற்றும் இதர நோய்களுக்கும் சிகிச்சை அளித்து இருக்கிறோம். ஒரே நேரத்தில் தமிழகத்தில் வீட்டு வரி, மின்சார கட்டணம் உயர்வு செய்து இருக்கிறார்கள். இது அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. குறிப்பாக சிறு, குறு தொழில் முனைவோரை பாதித்து உள்ளது.
ராகுல்காந்திக்கு நல்ல பெயர்
தற்போது தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சி மீது வெறுப்படைந்து இருக்கிறார்கள். மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் தி.மு.க. தலைவர்கள் இதனை திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். மாடல் என்றாலே வெறும் விளம்பரம் தான். இப்போது விளம்பர ஆட்சி தான் நடக்கிறது. இந்த ஆட்சியில் முதல்-அமைச்சரின் குடும்பமும், அமைச்சரின் குடும்பம் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை பயணம், அவருக்கு நல்ல பெயரை பெற்று தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏழைகளுக்கு தொடர்ந்து உதவுவோம்
முன்னதாக அறக்கட்டளை நிறுவனர் ஜெயந்தி ராஜூ நிருபர்களிடம் கூறும் போது, எங்களது அறக்கட்டளை சார்பாக மருத்துவ முகாம் மட்டுமின்றி மாணவர்களுக்கு தேவையான கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் டெய்லரிங் ஆகியவை கற்று தருகிறோம், பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கவுன்சிலிங் மற்றும் தொழிற்பயிற்சி அளிக்கிறோம். பெற்றோரை இழந்த பெண்களுக்கு திருமணம் செய்து வருகிறோம். இந்த மருத்துவ முகாம்கள் என்பது, எனது மகனின் கல்யாண விருந்து போன்றது. எனது கணவர் செல்லூர் ராஜூ மிகவும் நல்லவர். அவரை கணவராக அடைந்தது எனது பாக்கியம். நாங்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் கடவுளின் அருளால் இன்று பலருக்கும் உதவும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அனைவரின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும் ஏழை மக்களுக்கு தொடர்ந்து உதவுவோம் என்றார்.