கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்காந்தி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் ராகுல்காந்தியின் பாதயாத்திரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி தொடங்கிவைத்தார்.

Update: 2022-09-08 00:22 GMT

கன்னியாகுமரி,

ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார்.

ராஜீவ்காந்தி நினைவிடம்

'பாரத் ஜோதா யாத்ரா' என்ற பெயரில் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

பின்னர் நேற்று காலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் மனமுருக பிரார்த்தனை செய்தார். அங்கு மரக்கன்று நட்டதோடு, கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பின்னர் அவர் சென்னை திரும்பினார்.

கன்னியாகுமரி வந்தார்

சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 11.40 மணிக்கு திருவனந்தபுரம் வந்த ராகுல்காந்தி பிற்பகல் 2.20 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்கினார்.

அங்கிருந்து கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்காக ராகுல்காந்தி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்றார்.

படகுத்துறையில் இருந்து ராகுல்காந்தி தனி படகு மூலம் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலருடன் ஏறி சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டார்.

தியானம்

பின்னர் கடற்கரைக்கு திரும்பிய அவர் காமராஜர் மணிமண்டபத்திற்கு சென்று பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து காந்தி மண்டபத்துக்கு சென்று அங்கு நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவருடன் கலந்து கொண்டார்.

ராகுல்காந்தியை வரவேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாகவே காந்தி மண்டபத்திற்கு வந்திருந்தார். பின்னர் ராகுல்காந்தி மண்டபத்திற்கு வந்ததும் அவரை கட்டித்தழுவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

காந்தி மண்டபத்தில் இருவரும் தரையில் அமர்ந்து தியானம் செய்தனர். அவர்களுடன் தி.மு.க-காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேசிய கொடி வழங்கினார்

அதன் பிறகு ராகுல்காந்தியின் பாதயாத்திரை நிகழ்ச்சி தொடங்கியது. அதாவது மாலை 4.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கிவைத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு (700 மீட்டர் தூரம்) மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார்.

பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

நாட்டின் பொருளாதாரம்

ஆங்கில ஏகாதிபத்திய நடவடிக்கைதான் தற்போது உள்ளது. இந்தியர்களை மோத விடுங்கள். அவர்களை மோத விட்டு பணத்தை திருடுங்கள் என்று ஆங்கிலேய ஏகாதிபத்திய நடவடிக்கையை மோடி அரசு செய்கிறது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

ஆனால் இன்று இந்தியாவின் பொருளாதாரத்தை சில முதலாளிகள் கையில் வைத்துள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., விவசாயிகள் விரோத சட்டம் ஆகியவை பெரும் முதலாளிகளுக்கு உதவுவதற்காகவும், ஏழைகளின் வளமான வாழ்க்கையை திருடவும் பயன்படுகிறது.

தொழில் அதிபர்களின் கையில்...

நம்முடைய விவசாய வேளாண் தொழில் பல விதமான வேலை வாய்ப்புகளை தந்தன. ஆனால் இன்று சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் உள்ளன. நாட்டில் உள்ள வேளாண் மக்கள் உயிர் வாழ போராடுகிறார்கள்.

பா.ஜ.க. அரசு திட்டமிட்டு விவசாயிகளை, கூலி தொழிலாளிகளை, ஏழைகளை நசுக்கி வருகிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் தயாரிப்பது உள்பட அத்தனை தொழில்களும் சில தொழில் அதிபர்களின் கையில் சிக்கி உள்ளது. அவர்கள் இல்லாமல் நமது பிரதமரால் அரசியல் ரீதியாக ஒருநாள் கூட உயிர் வாழ முடியாது. அவர்களுக்கு வேண்டிய கொள்கைகளையும், திட்டங்களையும் அமல்படுத்துவதை பிரதமர் வாடிக்கையாக வைத்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த...

இந்த நாட்டில் இருக்கிற எதிர்க்கட்சிகளை சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை வைத்து அச்சுறுத்த எண்ணுகிறார்கள். எத்தனை மணி நேரம் விசாரணைக்காக உள்ளே அழைத்துச் சென்று கேள்வி கேட்கிறார்கள் என்பதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களை முடக்க முடியாது. பயமுறுத்த முடியாது.

நமது இளைஞர்கள் எந்த விதமான வேலைவாய்ப்பையும் பெற்று சம்பாதிக்க முடியாத நிலை உள்ளது. விலைவாசி விஷம் போல் ஏறுகிறது. எனவே வரலாற்றில் இல்லாத மோசமான கால கட்டத்துக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம்.

எனவே இந்த தருணத்தில் ஒற்றுமையாக இணைய வேண்டும். மக்களை ஒருமுகப்படுத்த வேண்டிய தருணம் வந்து இருக்கிறது. அதுதான் நான் ஏற்றுக்கொண்டுள்ள நெடும் பயணத்தின் நோக்கம் ஆகும். இந்த பயணத்தின் மூலமாக மக்கள் நினைப்பதை, ஆசைப்படுவதை என்னால் கேட்க முடியும்.

இந்த நாட்டு மக்களின் ஏக்கங்களை, ஆசைகளை பா.ஜ.க. போல, ஆர்.எஸ்.எஸ். போல நாம் நசுக்கவில்லை. இந்திய மக்களின் ஞானத்தை கேட்க விரும்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்களை பார்ப்பது பெருமையாக இருக்கிறது. அற்புதமான இந்த மாநிலத்துக்கு வந்து மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பங்கேற்பு

பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்-மந்திரிகள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்) மற்றும் அகில இந்திய காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த், சசிதரூர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, மனோ தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கல்லூரியில் ஓய்வு

பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலமாக அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு ராகுல்காந்தி சென்றார். அங்குள்ள 'கேரவனி'ல் ஓய்வெடுத்தார்.

அவருடன் பாதயாத்திரை சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் தனித்தனி 'கேரவன்'களில் தங்கினார்கள்.

தினமும் 25 கி.மீ. நடக்கிறார்

இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் இருந்து ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்குகிறார். இந்த பாதயாத்திரை 10-ந் தேதி வரை குமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது.

இன்று முதல் தினமும் ராகுல்காந்தி 25 கி.மீ. தூரம் நடக்கிறார். காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பாதயாத்திரை இரண்டு 'ஷிப்டு'களாக நடைபெறுகிறது. 11-ந் தேதியில் இருந்து ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.

அங்கு 18 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். பின்னர் 30-ந் தேதி கர்நாடக மாநிலம் செல்லும் அவர் அங்கு 21 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். அதன்பிறகு வடமாநிலங்களுக்கு செல்கிறார்.

ஒரு கோடி மக்கள் சந்திப்பு

குமரி மாவட்ட பாதயாத்திரையின்போது ராகுல்காந்தி சுமார் 1 லட்சம் பேரை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த 150 நாள் பாதயாத்திரை மூலமாக ராகுல்காந்தி ஒரு கோடி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

ராகுல்காந்தி பாதயாத்திரையையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் பல்வேறு வெளிமாவட்ட போலீசாரும் குமரி மாவட்டத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் சுமார் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்