தியாகதுருகம், சங்கராபுரம் சிவன் கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை
தியாகதுருகம், சங்கராபுரம் சிவன் கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே பிரசித்திபெற்ற நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதன்படி நஞ்சுண்ட ஞானதேசிகர் மற்றும் நவகிரகங்களுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ராகு-கேது சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
இதே போல், சங்கராபுரம் மணிமங்கலநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நவகிரக சன்னதியில் ராகு-கேதுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ராகு-கேதுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சங்கராபுரம் பகுதியில் உள்ள சிவன்கோவில்களில் உள்ள ராகு-கேதுவுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.