தரமான விதைகளை பயன்படுத்திஅதிக மகசூல் பெறுவது எப்படி?

விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது எப்படி? என்பது குறித்து வேளாண்மை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Update: 2023-09-21 18:45 GMT

நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் சரஸ்வதி, சரண்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தரமான விதைகள்

விவசாயத்தில் தரமான விதை உபயோகிப்பது மிக, மிக முக்கியம் ஆகும். தரமான விதை என்பது பரிசோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட விதைகள் ஆகும். விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் இருந்து பெறப்பட்ட தானிய வகை விதைகள், பயிறு வகை விதைகள் மற்றும் எண்ணெய் வித்து போன்ற விதைகளை விதைக்காக சேமிக்கும் போது, அதன் தரத்தினை அறிந்து சேமித்தல் இன்றியமையாதாதது ஆகும். விதையின் தரம் என்பது முளைப்புதிறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியவையாகும்.

இதற்கான பரிசோதனைகள் விதை பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. நாம் உபயோகிக்கும் விதைகளுக்கு பயிர் வாரியாக தர நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்ட விதைகளாயினும், விதைக்கும் முன்பு தரபரிசோதனை செய்து கொண்டு விதைத்தல் சால சிறந்தது ஆகும்.

அதிக மகசூல் பெறலாம்

எனவே விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளையும், விதை விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைகளையும், உற்பத்தி செய்யும் உண்மை நிலை விதைகளையும், பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து தரமான விதைகளையே பயன்படுத்துவது நல்லது. நாமக்கல் மாவட்டத்தில் விதை பரிசோதனை நிலையத்தில் குறைந்த கட்டணத்தில், ஒரு மாதிரிக்கு ரூ.80 என்கிற வீதத்தில் விதையின் புறத்தூய்மை, முளைப்புதிறன், ஈரப்பதம், பிறரக கலப்பு ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் தரமான விதைகளை உபயோகித்து அதிக மகசூல் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்