கழிப்பறை குறைபாடுகளை தெரிவிக்க 'க்யூ ஆர் கோடு' முறை

கொடைக்கானலில் கழிப்பறை குறைபாடுகளை தெரிவிக்க ‘க்யூ ஆர் கோடு’ முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று நகராட்சி தலைவர் செல்லத்துரை தெரிவித்தார்.;

Update:2023-01-31 19:44 IST

கொடைக்கானல் நகராட்சி கூட்டம், அதன் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. ஆணையாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை தீர்க்க வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர். இதைத்தொடர்ந்து வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் நுழைவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சா் இ.பெரியசாமி, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நகர்ப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கான பணியை, தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. மும்மத கல்லறைப் பகுதிகளை மேம்படுத்த ரூ.60 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கூட்டத்தில் தலைவர் செல்லத்துரை பேசுகையில், கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 40 கழிப்பறைகளின் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கும் வகையில், அதன் நுழைவாயிலில் 'க்யூ ஆர் கோடு' பொருத்திய ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. இதை பயன்படுத்தும் பொதுமக்கள் அங்கு ஏற்படும் குறைபாடுகள் குறித்து தகவல் தெரிவித்தால் நகராட்சி மூலம் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முடிவில் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்