புழல் பெண்கள் சிறையில் சோதனை முறையில் கைதிகளுக்கு 'வீடியோ கால்' வசதி - சிறைத்துறை டி.ஜி.பி. தொடங்கி வைத்தார்

புழல் பெண்கள் சிறையில் சோதனை முறையில் கைதிகளுக்கு ‘வீடியோ கால்’ வசதியை சிறைத்துறை டி.ஜி.பி. தொடங்கி வைத்தார்

Update: 2023-04-15 07:10 GMT

தமிழகத்தில் உள்ள சிறை கைதிகள் தங்களது உறவினர்கள், வக்கீலுடன் பேச 'வீடியோ கால்' வசதி ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். அதன்படி சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று கைதிகளுக்கு சோதனை முறையில் 'வீடியோ கால்' வசதி தொடங்கப்பட்டது.

இதனை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். இதில் டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன், சூப்பிரண்டுகள் நிகிலா, கிருஷ்ணராஜ், நாகேந்திரன் மற்றும் சிறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் கைதிகள், ஒரு மாதத்தில் 10 முறை தங்கள் உறவினர்களை 'வீடியோ கால்' மூலம் தொடர்பு கொண்டு பேசலாம். ஒரு அழைப்புக்கு 12 நிமிடம் வரை பேசலாம். புழல் பெண்கள் சிறையில் முதன் முதலில் ஒரு மாதம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதி, அதன் பிறகு அனைத்து சிறைகளிலும் ஏற்படுத்தப்படும். நீண்ட தொலைதூரத்தில் உள்ள கைதிகளின் உறவினர்கள், சிறைக்கு நேரடியாக வந்து சந்திக்க முடியாததால் இந்த வசதி அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். கைதிகளுக்கும் மன அழுத்தம் குறையும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்