தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்துகோவில் கட்டி வழிபடும் பேரன்கள்

Update: 2023-08-13 18:45 GMT

ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரம் ஊராட்சி தாண்டாக்கவுண்டன் புதூர் அருகே உள்ள அத்திமரத்து குட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யமுத்து. இவரது மனைவி அய்யம்மாள். அய்யமுத்து ராமாயிபட்டியில் உள்ள இருசாயி கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் இருந்து வந்து மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார். இந்தநிலையில் அய்யமுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும், அவரது மனைவி அய்யம்மாள் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும் இறந்தனர்.

அய்யமுத்து உயிருடன் இருக்கும்போதே இறந்த பிறகு தனக்கு சொந்தமான நிலத்தில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறி வந்ததாக தெரிகிறது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் அய்யமுத்துவை அடக்கம் செய்தனர்.

தாத்தாவின் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்று அவரது பேரன்கள் திட்டமிட்டனர். அதற்காக பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும்போது எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினாரோ, அதே இடத்தில் அய்யமுத்து, அவரது மனைவி அய்யம்மாளுக்கு சிலை வைக்க அவரது பேரன்கள், குடும்பத்தினர், உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவர்களுக்கு கோவில் கட்டி முழு உருவச்சிலை வைத்தனர்.

அய்யமுத்துவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்றுமுன்தினம் வேம்பு அரச மரத்தடியில் விநாயகர் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினர். இதனையடுத்து அய்யமுத்து-அய்யம்மாள் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து குடும்பத்துடன் அவர்கள் வழிபட்டனர். தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்து வழிபட்ட பேரன்கள், பேத்திகள், உறவினர்களின் செயல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்