புரட்டாசி 3-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-10-07 22:01 GMT

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். அதனால் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோபி மூலவாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணிக்கு சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் எழுந்தருளினார். பக்தர்கள் மலையை சுற்றி தேரை இழுத்து வந்தனர். இதேபோல் கோபி வரதராஜ பெருமாள், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் மற்றும் மொடச்சூர், கொளப்பலூர், அளுக்குளி, குள்ளம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அனைவருக்கும் துளசி தீர்த்தமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

கோபி கூகலூரில் உள்ள சிவபக்தர் ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், எலுமிச்சை பழச்சாறு, விபூதி, சந்தனம், செந்தூரத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.

அந்தியூர்

அந்தியூர் தேர்வீதியில் உள்ள பேட்டை பெருமாள் கோவில், சிவசக்தி நகரில் உள்ள கோட்டை அழகுராஜா பெருமாள் கோவில், கெட்டி சமுத்திரம் கரை பெருமாள் கோவில், அந்தியூர் பெரியேரி பெருமாள் கோவில், தவிட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், கருவாச்சி மலையில் உள்ள கரிய பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

சிவகிரி மாயவர் கோவில்

சிவகிரி செட்டித்தோட்டம் கீழ்பவானி வாய்க்கால் கரையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள புற்றுக்கண் நாகாத்தம்மன் கோவில் வளாகத்தில், மாயவர் கோவிலும் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை 4 மணியளவில் மாயவருக்கு அப்பகுதி மக்கள் மண்பானையில் சோறுசமைத்து, படையலிட்டு மழைபெய்ய வேண்டும் என்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் மொடக்குறிச்சி அடுத்த கஸ்பாபேட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்