ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் நடந்த புரட்டாசி 2-வது சனிவார விழா
ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் நடந்த புரட்டாசி 2-வது சனிவார விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சேத்துப்பட்டு
ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் நடந்த புரட்டாசி 2-வது சனிவார விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள சிம்ம மலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மர், சீனிவாச பெருமாள், பூதேவி தாயார், ஆண்டாள் நாச்சியார், நரசிம்மர்கள், மேல்மலையில் உள்ள வெங்கடாஜலபதி-அமுதவல்லி தாயார், ரங்கநாதர், யோக நரசிம்மர், கருடாழ்வார், அனுமந்தாழ்வார் அருள்பாலி்கின்றனர். ராகு கேது தோஷங்களை நீக்கும் கோவிலாகவும் இது உள்ளது. இங்கு புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி அனைத்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. 168 படிகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்தவாறு மலை மீது ஏறிய பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து லட்சுமி நரசிம்மர், சீனிவாச பெருமாள் உள்ளிட்ட சாமிகளை தரிசனம் செய்தனர்.
மேலும் விவசாயிகள் உலகில் வளம் பெருக வேண்டி தங்கள் வயலில் விளைந்த நெல், மணிலா மற்றும் கரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை காணிக்கை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் அரிசியை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.காலையிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இரவு 12 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு இருந்தது.
மலை அடிவாரத்தில் நித்திய சொற்பொழிவாளர் மணிபால சுவாமிகளின் 3-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக செயல் அலுவலர் சரண்யா மற்றும் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.