மே மாதத்துக்கான பருப்பு, பாமாயிலை ஜூன் மாதத்தில் சேர்த்து வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

நியாயவிலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-06-03 06:25 GMT

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த இரு மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை. பொதுமக்களுக்கு வழங்குவதற்கான துவரம்பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும், அவை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் விளக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் சிறப்பு பொது வழங்கல் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30 என்ற விலையிலும், ஒரு கிலோ பாமாயில் ரூ.25 என்ற விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்விலிருந்து பொதுமக்கள் தங்களைக் காத்துக் கொள்ள இது பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால், கடந்த ஏப்ரல் மாத மத்தியிலிருந்து நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஒப்பந்ததாரர்களிடமிருந்து துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை பெறப்பட்டு நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கடந்த மே 27-ஆம் தேதி விளக்கமளித்த தமிழக அரசின் பொதுவழங்கல் துறை, மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் அவற்றை ஜூன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

ஆனால், ஜூன் மாதம் முதல் வாரம் அடுத்த சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் பெரும்பான்மையான நியாயவிலைக் கடைகளில் மே மாதத்திற்கான துவரம்பரும்பு இன்னும் வழங்கப்படவில்லை. சில கடைகளில் துவரம் பருப்பு வழங்கப்பட்ட நிலையில், பாமாயில் வழங்கப்படவில்லை; பாமாயில் வழங்கப்பட்ட கடைகளில் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை.

ஏழை மக்களின் தேவையையும், பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மே மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை கிடைக்காத குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் ஜூன் மாதத்தில் அவற்றை சேர்த்து வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்