புதுக்கோட்டை-தஞ்சாவூர் புதிய ரெயில் பாதை திட்டம் நிறைவேறுமா?

100 ஆண்டுகள் பழமையான புதுக்கோட்டை-தஞ்சாவூர் புதிய ரெயில் பாதை திட்டம் நிறைவேறுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். வருகிற பட்ஜெட்டில் நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-12-17 22:07 IST

பழமையான திட்டம்

நாட்டில் ரெயில் பாதைகள் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும். காலப்போக்கில் இப்பாதைகள் அகல ரெயில் பாதைகளாக மாற்றி மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ரெயில் வழித்தடமும் ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டவை தான். தற்போது புதுக்கோட்டை வழியாக எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில் என 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இத்திட்டமானது இன்றல்ல, நேற்றல்ல ஏறக்குறைய 100 ஆண்டுகள் பழமையானதாகும். ஆம் அன்றைய ஆங்கிலேயர்கள் தஞ்சாவூர்-புதுக்கோட்டை ரெயில் வழித்தடம் அமைக்க முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் போக்குவரத்து எண்ணிக்கையை காரணம் காட்டி திருச்சி-புதுக்கோட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.619 கோடி திட்ட மதிப்பீடு

நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் கூட இத்திட்டத்தை நிறைவேற்ற பலரும் நினைத்தனர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2012-2013-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே ரெயில் பாதை கந்தர்வகோட்டை வழியாக 65 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின் இத்திட்டத்திற்காக நில அளவை பணிகள் நடைபெற்றது.

கடந்த 2016-ம் ஆண்டு ரெயில்வே வாரியத்திடம் இத்திட்டத்திற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் திட்டமதிப்பீடு அப்போது ரூ.619 கோடி ஆகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. புதுக்கோட்டை-தஞ்சாவூர் புதிய ரெயில் பாதை திட்டமானது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டம் நிறைவேறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-

பயண நேரம் குறையும்

''புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருச்சி சென்று தஞ்சாவூர் மார்க்கமாக செல்கின்றனர். இதேபோல் வரும் வழித்தடத்திலும் இதே நிலை தான். இதனால் புதுக்கோட்டை-தஞ்சாவூர் பாதையின் தூரம் 103 கிலோ மீட்டர் வரை வரும். புதிய ரெயில் பாதை அமைக்கப்படுவதின் மூலம் 65 கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணம் குறையும். இதனால் ரெயில்வே நிர்வாகத்திற்கு ஏற்படும் செலவுகள் மிச்சமாகும். புதிய ரெயில்கள் கூடுதலாக இயக்க வாய்ப்பு உள்ளது. இந்த பாதையில் பயண நேரம் குறையும். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் நடைமேடை நெருக்கடியில் தவித்து வருகிறது. புதுக்கோட்டை-தஞ்சாவூர் ரெயில் பாதை அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதில் அதிக ரெயில்கள் இயக்கப்படலாம். சரக்கு ரெயில் போக்குவரத்தும் அதிகம் கையாளலாம். வருகிற பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி புதிய ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் இதனை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். தமிழக அரசும் நிதி பகிர்மானம் செய்ய முன்வந்தால் இத்திட்டம் விரைந்து நிறைவேறும்''.

சந்திப்பு ரெயில் நிலையமாக...

ரெயில் பயணிகள் தரப்பில் சமூக ஆர்வலர் இப்ராகிம் பாபு:- இத்திட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் புதுக்கோட்டை ரெயில் நிலையம் சந்திப்பு ரெயில் நிலையமாக தரம் உயரும். புதுக்கோட்டை வழியாக கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு இந்த பாதை மிகவும் வசதியாக இருக்கும். தற்போது திருச்சி சென்று தஞ்சாவூர் செல்லக்கூடிய ரெயில் மார்க்க பயண நேரம் குறையும். இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

2 தலைமுறையாக வலியுறுத்தல்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மோகன்ராஜா:- ''புதுக்கோட்டை-தஞ்சாவூர் ரெயில் பாதை திட்ட கோரிக்கையானது 2 தலைமுறையாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரெயில் வழித்தடம் வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரங்களை இணைக்க கூடியதாகும். புதுக்கோட்டையில் இருந்து நேரடியாக கூடுதலாக ரெயில்களை இயக்க வேண்டும்''. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்