பட்டா வழங்க கோரி வருவாய் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
பட்டா வழங்க கோரி வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அம்மணம்பாக்கம்- பிர்காவுக்கு உட்பட்ட மாகரல், கோமக்கம்பேடு, அம்மணம் பாக்கம், அகரம் செம்பேடு, வெங்கல் உள்ளிட்ட கிராமங்களில் அரசு புறம்போக்கு இடங்களில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வருடங்களுக்கு முன்பு தோராய பட்டாக்களை வருவாய்த் துறையினர் வழங்கினர். ஆனால், இதனை கிராம கணக்குகளில் ஏற்றி சிட்டா அடங்கல் வழங்க கோரி கடந்த நவம்பர் மாதம் 400-க்கும் மேற்பட்ட மக்கள் அம்மணம் பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நத்தம், பாட்டைதோப்பு உள்ளிட்ட ஆட்சேபனை அற்ற இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய கிளையின் சார்பாக மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி அம்மணம் பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் நேற்று மதியம் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். அதிகாரிகள் வந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரையில் அங்கேயே தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு போராட்டத்தை தொடர்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இந்த போராட்டத்துக்கு வட்ட செயலாளர் எம்.பழனி தலைமை தாங்கினார். கோமக்கம்பேடு தேவேந்திரன், மணிவண்ணன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநிலச் செயலாளர் துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் சம்பத், வட்டத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.