பள்ளி நேரத்தில் பஸ் இயக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பள்ளி நேரத்தில் பஸ் இயக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விராலிபட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் செட்டிகுளம் கிராமத்திற்கு சென்று பயின்று வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அனைவரும் இலவச பஸ் பயண அட்டையை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் பள்ளி நேரத்தில் பஸ் இயக்கக்கோரி புது விராலிபட்டி பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.