காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
வத்திராயிருப்பு அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட குன்னூர் ஊராட்சியில் திருவள்ளுவர் காலனி, கலைஞர் காலனி என இரு காலனிகள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் சரியாக ஏற்றப்படாமல் இருப்பதால் கிராம மக்களுக்கு தண்ணீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தநிலையில் அப்பகுதி மக்கள் குன்னூர் செல்லும் சாலையில் தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவலறிந்து கிருஷ்ணன்கோவில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் குன்னூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.