மக்கள் தொடர்பு முகாம்: 288 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

சக்கந்தி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 288 பயனாளிகளுக்கு ரூ.1. கோடியே 69 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

Update: 2023-03-09 18:45 GMT


சக்கந்தி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 288 பயனாளிகளுக்கு ரூ.1. கோடியே 69 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை தாலுகா சக்கந்தி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளர் .ஜீனு, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் .சுகிதா, சிவகங்கை ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர்; மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராமசாமி, பனையூர் கூட்டுறவுச்சங்கத் தலைவர் மணிமுத்து, சக்கந்தி ஊராட்சி மன்றத்தலைவர் கோமதி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

86 மனுக்கள் மீது நடவடிக்கை

பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமினை முன்னிட்டு, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 277 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில், தகுதியுடைய 86 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

288 பயனாளிகள்

அதன் பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 288 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 69 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்