உடைந்த குழாயை சரிசெய்யக்கோாி பொதுமக்கள் போராட்டம்

விழுப்புரம் நகராட்சி 9-வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குழாய் உடைப்பை சரிசெய்யக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-30 18:03 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சி 9-வது வார்டில் 3,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீட்டு குழாய்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு தெரு, மாசிலாமணிபேட்டை, கமலா நகர், மேல்தெரு, முகமதியார் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. மாசடைந்து வரும் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

திடீர் போராட்டம்

இது குறித்து புகார் அளித்தும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை நகரமன்ற கவுன்சிலர் ராதிகா செந்தில் தலைமையில் கழிவுநீர் கலந்து வரும் குடிநீரை பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களில் பிடித்துக்கொண்டு வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. அசுத்தம் நிறைந்தவாறு வரும் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் குடிநீர் கிடைக்காமல் நாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறோம். எனவே குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை உடனடியாக கண்டறிந்து அதனை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் அல்லது சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, குழாய் உடைப்பை கண்டறிந்து அதனை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்