சாலை பணிைய விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
துறையூர் அருகே லாரி டிரைவர் விபத்தில் சிக்கினார். இதையடுத்து சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர், அக்.4-
துறையூர் அருகே லாரி டிரைவர் விபத்தில் சிக்கினார். இதையடுத்து சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சரியில்லாத சாலை
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் தீபக்(வயது 24). லாரி டிரைவரான இவர் தனியார் பால்பண்ணை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு புலிவலத்தில் உள்ள பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, சாலை சரியில்லாததால் மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் கீழே விழுந்தார். இதில் அவர் காயம் அடைந்தார்.
சாலை மறியல்
இதையடுத்து புலிவலம் பகுதி மக்கள் அப்பகுதியில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த சில மாதங்களாக புலிவலம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வந்தது. ஆனால் பல மாதங்களாக அந்த பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தினமும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் பலமுறை நேரில் சென்று வலியுறுத்தியதோடு, சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கோரி மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை சாலை பணி நிறைவடையாமல் அதே நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே ஒப்பந்ததாரர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
மறியலால் திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் பஸ்களும், துறையூரில் இருந்து திருச்சி செல்லும் பஸ்களும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து புலிவலம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, ஒப்பந்ததாரர் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என்று பொதுமக்கள் கூறினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.