நூறு நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

வடகாடு அருகே உள்ள அனவயல் எல்.என்.புரத்தில் நூறு நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-27 18:28 GMT

நூறு நாள் வேலை

வடகாடு அருகே அனவயல் பகுதியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலைக்கான அடையாள அட்டையை வைத்து உள்ளனர்.

இவர்களுக்கு முறையாக, நூறு நாள் வேலை வழங்கவில்லை எனக்கூறி இப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனவயல் எல்.என்.புரம் ஆர்ச் அருகேயுள்ள நெடுஞ்சாலை பகுதியில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆலங்குடி-ஆவணம் கைகாட்டி நெடுஞ்சாலை பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல், வரிசையாக அணிவகுத்து நின்றன.

கோரிக்கை

இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் நூறு நாள் வேலைக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆனால் இங்கு மட்டும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே நூறு நாள் வேலை பணி வழங்கப்படுவதாகவும், இதனால் தங்களுக்கு முறையாக நூறு நாள் வேலையை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து அடுத்த வாரத்தில் இருந்து முறையாக நூறு நாள் வேலை வழங்கப்படும் என துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஆலங்குடி-ஆவணம் கைகாட்டி சாலையில், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்