கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-29 18:25 GMT

முற்றுகை

பேரணாம்பட்டு தாலுகா ராஜக்கல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் ராஜக்கல் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடீரென அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சிலர் மட்டும் அதிகாரியை சந்தித்து மனு அளிக்கலாம் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்களில் சிலர் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்

அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ராஜக்கல் ஊராட்சியில் தலைவராக கருணாகரன் என்பவரும், துணை தலைவராக விஜய்குமார் என்பவரும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி மேல்கொத்தகுப்பம் பஸ்நிலையம் அருகே சில காரணங்களால் விஜய்குமார், கருணாகரனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கருணாகரன் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்