ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
திருவண்ணாமலையில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள்
திருவண்ணாமலை உழவர் சந்தை அருகே தியாகி அண்ணாமலை தெருவில் உள்ள பொருளாம்குளம், வேடியப்பன் கோவில் தெருவில் உள்ள வேடியப்பன் குளம் மற்றும் அதன் அருகில் உள்ள பிள்ளை குளம் ஆகியவற்றின் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டியிருந்தனர்.
இதனை அகற்றக்கோரி தனி நபர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்துஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவ்வழக்கை மீண்டும் விசாரித்த ஐகோர்ட்டு வருகிற 1-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நீர் நிலை பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வருவாய்த்துறையின் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தாசில்தார் சுரேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் மேற்பார்வையில் தியாகி அண்ணாமலை நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. அசம்பாவிதங்களை தடுக்க துணை சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார்் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கீற்று கொட்டகை மற்றும் வீட்டின் முகப்பு பகுதி பொக்லைன் எந்திரத்தின் மூலம் பணியாளர்கள் இடித்து அகற்றினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
தொடர்ந்து வேடியப்பன் கோவில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். இந்த பகுதியில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து சுமார் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது அதில் வசித்தவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இருப்பினும் அவர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. மாற்று இடம் வழங்குவதாக தெரிவித்ததையடுத்து போராட்டக்காரர்கள் சமரசம் அடைந்தனர்.
அதன் பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.