விருத்தாசலம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

விருத்தாசலம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-16 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த எருமனூர்-பரவலூர் இடையே இணைப்பு சாலை அமைந்துள்ளது. விவசாய விளைநிலங்களுக்கு இடையே செல்லும் இந்த இணைப்பு சாலையானது பல வருடங்களாக மண்சாலையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறுவதால், அதன் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நேற்று திடீரென விருத்தாசலம்-சிறுவம்பார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்காத பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஓட்டு கேட்க மட்டும் ஊராட்சி மன்ற தலைவரும் மக்கள் பிரதிநிதிகளும் வருகிறார்கள்.

ஆனால் நாங்கள் எங்களது கோரிக்கைகளை தெரிவித்தால் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். அதனை ஏற்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்