கரூர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.;

Update:2023-04-25 00:18 IST

  குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 527 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 51 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

குடிநீர் இல்லை

கூட்டத்தில் புன்னம்சத்திரம் எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எம்.ஜி.ஆர். நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் 800 பேர் வசித்து வருகிறோம். எங்களுக்கு 2 குடிநீர் தொட்டிகள் இருந்தும் கடந்த 20 நாட்களாக குடிநீர் வரவில்லை. அனைத்து ஊர்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி செல்கிறது.

புன்னம் ஊராட்சி மூலம் கடந்த 23-ந்தேதி லாரியின் மூலம் தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த குடிநீர் சுகாதாரமற்ற நிலையில், கலங்கலாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிப்படைய செய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் வேண்டும்

முனையனூர் சமத்துவபுரம் ஊர்பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் சுமார் 23 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி நாங்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம். முக்கிய அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, கழிப்பிட வசதி, சாலை வசதி போன்றவை இல்லை.

சுமார் 300 வீடுகள் கொண்ட எங்கள் குடும்ப குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையமோ, ஆரம்பப்பள்ளி கூடமோ, சமூகநல கூடமோ இதுவரை இல்லை. மேலும் தெரு சாலைகளின் இரு பக்கங்களிலும் சாக்கடை வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்