மெட்ரோ ெரயில் பணிக்காக அம்மன் கோவிலை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு; மாற்று இடம் கேட்டு ஆர்ப்பாட்டம்
மெட்ரோ ெரயில் பணிக்காக அம்மன் கோவிலை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சென்னை ஓட்டேரி கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் பாஷ்யம் 3-வது தெரு சந்திப்பில் ஆதி சேமாத்தம்மன் கோவில் உள்ளது. மெட்ரோ ெரயில் பணிக்காக இந்த கோவில் அகற்றப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய இந்து சத்திய சேனா அமைப்பின் நிறுவனர் வசந்தகுமார் தலைமையில் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக பெண்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து பஜனை செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட அவர்கள் திரு.வி.க நகர் மண்டல அதிகாரி முருகனை சந்தித்து மாற்று இடத்தில் கோவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து தர கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.