தடுப்பு வேலி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பந்தலூர் அருகே தடுப்பு வேலி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே சேரம்பாடி பஜாரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களுக்கு 2 சென்ட் முதல் 10 சென்ட் வரை வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வருவாய்துறையினர் நத்தம் பூமி என்று கூறி, பஜாரை ஒட்டி தடுப்பு வேலி அமைத்தனர். இதனால் நேற்று முன்தினம் வேலி அமைக்கப்பட்ட பகுதியில் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சேரம்பாடி பஜாரில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இதற்கிடையே நத்தம் நிலம் என்று கூறி வருவாய்துறையினர் தடுப்பு வேலி அமைத்து உள்ளனர். இதனால் கழிப்பறை, குடிநீர் கிணற்றுக்கு செல்ல முடிவதில்லை. எனவே, அதிகாரிகள் வேலியை அகற்ற வேண்டும். இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.