கடலூரில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சுருங்கிப்போன தானம்நகர் குளம் தூர்வாரி பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கடலூரில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சுருங்கிப்போன தானம்நகர் குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-27 18:45 GMT

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தானம்நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குளம் ஒன்று உள்ளது. நவநீதம் நகர், அக்கிள்நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீரானது வடிகால் வாய்க்கால் வழியாக இந்த குளத்திற்கு வருகிறது. இந்த குளம் அப்பகுதியில் உள்ள ராமானுஜம்நகர், தானம்நகர், நவநீதம்நகர், அக்கிள்நாயுடு தெரு, சதாசிவம் நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல தண்ணீர் குளமாக இருந்ததால், அப்பகுதி மக்கள் அந்த குளத்தின் தண்ணீரை வீட்டு உபயோகத்திற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தொடக்கத்தில் 3 ஏக்கர் 5 சென்ட் இடத்துடன் இருந்த குளமானது காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி சுருங்கிப்போனது. கடலூர் நகரிலேயே கடந்த காலங்களில் இது தான் மிகப்பெரிய குளமாக காணப்பட்டுள்ளது. தற்போது குளத்தின் பாதி பகுதி வீட்டுமனைகளாக மாறிவிட்டன. சுமார் 1½ ஏக்கரில் தான் குளம் உள்ளது. அதனையும் அப்பகுதியில் வசிப்பவர்கள் விட்டு வைக்கவில்லை. குளத்தின் கரை, இயற்கை உபாதை கழிக்கும் பகுதியாக உள்ளது.

வெள்ளத்தில் மிதக்கும் நகர்

மேலும் குளம் நிரம்பினால் உபரிநீரை வெளியேற்ற வடிகால் ஏதும் இல்லை. குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளதால் வடிகால் வாய்க்கால் அமைக்கவும் வாய்ப்பில்லாத நிலை காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கி விட்டாலே தானம் நகர் வெள்ளத்தில் தான் மிதக்கிறது.

இதனால் மழைக்காலங்களில் மின்மோட்டார் மூலமாக தான் மழைநீரை வெளியேற்ற வேண்டிய நிலை உள்ளது. குளத்தின் கரையோரம் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில் அதற்குள் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் குழந்தைகள் மழைக்காலங்களில் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

நிலத்தடி நீர் பாதிப்பு

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், குளத்தில் தேங்கி நிற்பதால் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரை கூட மக்களால் பயன்படுத்த முடியவில்லை. மேலும் குளம் முழுவதும் ஆகாய தாமரைகள் அடர்ந்து வளர்ந்து பச்சைபசேலென காணப்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடிகால் வாய்க்கால்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த காலங்களில் தானம் நகர் குளத்தில் தான் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர். ஆனால் தற்போது 30-க்கும் மேற்பட்டோர் அந்த குளத்தை ஆக்கிரமித்துள்ளதால் குளம் இருப்பதே தெரியாத அளவுக்கு மாறியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏரி தூர்வாரப்பட்டது. ஆனால் அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் மழைக்காலங்களில் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும் வகையில் வடிகால் அமைக்க வேண்டும். மேலும் குளத்தின் கரையை பலப்படுத்தி, பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் நடைபாதை அமைத்து, குளத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்