திருத்தணி-பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையில் நந்தியாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணி அருகே திருத்தணி-பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையில் நந்தியாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-06 07:31 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி- பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலை அகூர் எம்.ஜி.ஆர்.நகர் வழியாக செல்கிறது. மேலும் இந்த நெடுஞ்சாலை வழியாக நந்தியாறு செல்வதால் சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக, திருத்தணியில் இருந்து, தெக்களூர், சூர்யநகரம், கிருஷ்ணசமுத்திரம், புச்சிரெட்டிப்பள்ளி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்பட தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். குறிப்பாக மேற்கண்ட கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மோட்டார் சைக்கிளில் திருத்தணிக்கு வந்து செல்கின்றனர்.

மழை காலங்களில் தொடர் மழை பெய்தால் தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் போக்குவரத்து தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் தரை பாலத்தின் இரு புறங்களிலும் எந்த ஒரு தடுப்புகளும் இல்லாததால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதனால் மேற்கண்ட கிராம மக்கள், வாகன ஓட்டிகள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்