தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள்; மக்கள் கருத்து
திண்டுக்கல் மாவட்டத்தில் தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள் குறித்து பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள் குறித்து பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடிப்படை வசதிகள்
நாட்டு மக்கள் நலமுடன் வாழ்வதே அரசின் இலக்காக இருக்கும். இதற்காக நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் அரசு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருகிறது. சாலை, குடிநீர், மழைநீர் வடிகால்கள், சாக்கடை கால்வாய்கள், பஸ், ரெயில் போக்குவரத்து என வசதிகள் ஏராளம். இந்த அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதோடு, முறையாக கண்காணித்து பராமரிப்பது அவசியம். எனினும் மழைக்காலத்தில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்று நினைக்கும் அளவுக்கு மோசமாகி மக்களை வேதனைக்கு உள்ளாக்கி விடுகிறது.
இதற்கு கடந்த சில நாட்களாக பெய்த பருவமழையே சாட்சியாக இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது. இதன் விளைவாக திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டன. அதேபோல் மழைநீர் வடிகால்களில் மண், குப்பை சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததோடு, வீடுகளுக்கு உள்ளேயும் புகுந்தது.
உடனடி தீர்வு
மேலும் மழை நின்று 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியவில்லை. மண் பாதையாக இருந்த தெருக்கள் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. அதுமட்டுமின்றி பஸ், ரெயில் நிலையங்களிலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக மக்கள் புலம்புகின்றனர். இந்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுபற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-
ராஜா (திண்டுக்கல் ரவுண்டுரோடு):- திண்டுக்கல் நகரில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. பஸ், வேன், கார்களில் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. ரவுண்டுரோட்டில் இருந்து திருச்சி சாலைக்கு செல்லும் ஜி.டி.என். சாலையை இருவழி பாதையாக மாற்றும் பணி மிகவும் மந்தமாக நடக்கிறது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். சாரல் மழை பெய்தால் கூட சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. எனவே ஜி.டி.என். சாலை உள்பட நகரில் சேதமான அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்றும் இன்னும் முடியவில்லை. அதை விரைவுபடுத்தி பாலம் கட்டி முடிக்க வேண்டும்.
சோபியா (திண்டுக்கல் லையன்தெரு):- திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுரங்கப்பாதை வழியாக மக்கள் செல்ல முடியவில்லை. முதியவர்கள் நடைமேடை பாலம் வழியாக செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. எனவே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு போதிய பஸ் வசதி செய்து தரவேண்டும். காந்தி மார்க்கெட் முன்பு குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும்.
தேங்கும் மழைநீர்
நாகேஸ்வரி (திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி):- திண்டுக்கல்லில் மழை பெய்தாலே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி விடுகிறது. ஒத்தக்கண் பாலம், விவேகானந்தாநகர், சந்துருநகர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் இரவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
ஹேமலதா (பழனி):- தொடர் மழையால் பழனியை சுற்றிலும் உள்ள குளங்கள் நிரம்ப தொடங்கி உள்ளன. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. பழனி அடிவாரம் பகுதியில் வெளிமாநில வியாபாரிகள் வருகையால் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அதிகமாக சேருகின்றன. மழைக்காலமாக இருப்பதால் சுகாதாரக்கேடு உருவாகாமல் தடுக்க சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.