உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மனநல ஆலோசனை

துப்பாக்கியால் சுட்டு டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்ததை தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி. அருண் தலைமையில் நடந்த கூட்டத்தில், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

Update: 2023-07-08 19:45 GMT

துப்பாக்கியால் சுட்டு டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்ததை தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி. அருண் தலைமையில் நடந்த கூட்டத்தில், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


கூடுதல் டி.ஜி.பி. 


கோவையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண் கோவை வந்தார். அவர், டி.ஐ.ஜி.யின் தற்கொலை குறித்து அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர், தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த பாதுகாவலர் ரவிச்சந்திரன் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினார்.


இதையடுத்து கோவை சரக போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி. அருண் நேற்று காலை ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டம் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.


கூட்டத்தில் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை, கோவை, திருப் பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சி னை, போலீஸ் துறையின் செயல்பாடுகள், போலீஸ் அதிகாரிக ளின் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் கூடுதல் டி.ஜி.பி. அருண் பல்வேறு ஆலோசனை வழங்கினார்.


மனநல ஆலோசனை


கூட்டத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு, திருப்பூர் சூப்பிரண்டு சாமி நாதன், கோவை சூப்பிரண்டு பத்ரி நாராயணன், ஈரோடு சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் 6 துணை கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-


போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என அனைவருக்கும் யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி, உள்பட பல்வேறு மனநல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதுவரை அதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்படுவது இல்லை. எனவே போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மன நல ஆலோசனை உள்ளிட்ட பயிற்சி அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.


வாரத்தில் ஒரு நாள் விடுப்பு


சப்-இன்ஸ்பெக்டருக்கு கீழ் வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் (எஸ்.எஸ்.ஐ), போலீசார் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு கொடுக்கப்படுகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வகையிலும் போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதுதவிர போலீசார் மற்றும் அதிகாரிகளின் மனநிலையை அறிந்து கொள்ள மனநல மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கேள்விகளை உருவாக்கி, போலீஸ் அதிகாரிகளின் பதில்களை பெற்று அவர்களின் மனநிலை அறிந்து கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.


விஜயகுமாருக்கு அஞ்சலி


உடல் நல பிரச்சினைகளுக்கு சுயமருத்துவம் செய்து கொள்ளக் கூடாது. மருத்துவர்களின் ஆலோசனை பெற்றே மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


இவ்வாறு அவர் கூறினார்.


கூட்டத்திற்கு பின்னர் தற்கொலை செய்து கொண்ட கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி விஜயகுமாரின் உருவப்படத்திற்கு கூடுதல் டி.ஜி.பி.அருண், தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.


மேலும் செய்திகள்