9 செயற்கைக்கோள்களுடன் 'பி.எஸ்.எல்.வி. சி-54' ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது...!

9 செயற்கைக்கோள்களுடன் 'பி.எஸ்.எல்.வி. சி-54' ராக்கெட் 26-ந் தேதி (நாளை) விண்ணில் சீறிப்பாய்கிறது.

Update: 2022-11-25 05:02 GMT

சென்னை,

விக்ரம் வரிசையில் 'விக்ரம்-எஸ்' என்ற நாட்டின் முதல் தனியார் ராக்கெட், 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கடந்த 18-ந் தேதி காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த ராக்கெட்டை 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற புத்தொழில் நிறுவனம் ('ஸ்டார்ட்-அப்') வடிவமைத்திருந்தது.

இந்த நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, 'பி.எஸ்.எல்.வி.சி-54' என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளது. இந்த ராக்கெட் 'ஓசன்சாட்03' என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து செல்லும்.

இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், நாளை (சனிக்கிழமை) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 'கவுண்ட் டவுன்' என்று அழைக்கப்படுகிற இறங்குவரிசை ஏற்பாடுகள், 25-ந்தேதி (இன்று) தொடங்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டது. முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் இது 56-வது திட்டப்பணியாகும்.

Tags:    

மேலும் செய்திகள்