மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ேபாராட்டம் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடந்தது.

Update: 2023-08-12 18:30 GMT

திருவாரூர்;

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ேபாராட்டம் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடந்தது.

காவிரி நீர்

கருகும் குறுவை பயிரை காப்பாற்ற கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி உரிய நீரை திறந்துவிட வேண்டும். மத்திய அரசு கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, இழப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இதன்படி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு நாகை செல்வராஜ்எம்.பி. தலைமை தாங்கினார். கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாசிலாமணி முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜோசப், ஒன்றிய செயலாளர் நாகராஜன், நகர செயலாளர் செல்வம், மற்றும் பலர் கலந்து கொண்டு காவிரி நீரை வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.

மன்னார்குடி

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்துக்கான தண்ணீரை கர்நாடகம் உடனே வழங்க வேண்டும். குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தி மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் ஆர்.வீரமணி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்துரை அருள்ராஜன், நகர செயலாளர் வி.எம்.கலியபெருமாள் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலத்தில் தபால் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரெ.ஞானமோகன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்து விடக்கோரி கோஷம் எழுப்பினர்.

கொரடாச்சேரி

தமிழகத்திற்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் திறக்க வேண்டிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கொரடாச்சேரி தபால் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவானந்தம் தலைமை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ. விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.குடவாசலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்தில் குடவாசல் ஒன்றிய செயலாளர் டேவிட் ராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரவேலு, நமசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முத்துப்பேட்டையில் தலைமை தபால் நிலையத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்