மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்
கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விடக்கோரி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் 12-ந் தேதி நடக்கிறது.
திருவாரூர்;
கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விடக்கோரி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் 12-ந் தேதி நடக்கிறது.
இந்திய கம்யூனிஸ்டு கூட்டம்
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாரிமுத்து எம்.எல்.ஏ., தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அ.பாஸ்கர், திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்கு பின் கட்சியின் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காய்ந்த பயிர்கள்
தமிழகம் முதல்-அமைச்சர், ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இந்தநிலையில் கர்நாடக அரசு காவிரி நீரை தீர்ப்பின் படி திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் காய்ந்துள்ளது.ஒரு சில விவசாயிகள் வேறு வழியின்றி உழுது விட்டார்கள். இதுவரை இறவையில் தண்ணீரீரை இறைத்து கூடுதல் செலவு செய்துள்ளதால் விவசாயிகளுக்கு இனி மகசூல் வருமானம் கிடைக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும்.
முற்றுகை போராட்டம்
இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், இதுவரை தண்ணீர் இல்லாமல் சாகுபடி அழிந்து இழப்பை அடைந்துள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும் குறுவை சாகுபடிக்கான பயிர்க்காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கேட்டும்12-ந் தேதி(சனிக்கிழமை) காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.