சிட்லபாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் சாலை மறியல்

சிட்லபாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஏரி கரையோரம் இருந்த 2 வீடுகளை மட்டும் இடித்து அகற்றினர்.

Update: 2022-07-08 06:54 GMT

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள 438 வீடுகள், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி பொதுப்பணிதுறை மற்றும் வருவாய்த்துறையினர் ஏரியை ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஐகோர்ட்டு உத்தரவுபடி நேற்று ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டி, விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை வழிமறித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் பிரபு மற்றும் அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு முதல் கட்டமாக ஏரி கரை பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்களை கொண்டு சிட்லபாக்கம் ஏரிக்கரை பகுதியில் இருந்த 2 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர். முதல் கட்டமாக ஏரிக்கரை பகுதியில் உள்ள வீடுளை அகற்றும் பணி நடைபெற்றதாகவும், மற்ற ஆக்கிரமிப்புகளை‌ அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்