காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: தலைதீபாவளியை கொண்டிய பெண் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைப்பு - சித்தப்பாவுக்கு போலீஸ் வலைவீச்சு

காதல் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலை தீபாவளியை கொண்டாடிய பெண் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த சித்தப்பாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-10-25 20:18 GMT


காதல் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலை தீபாவளியை கொண்டாடிய பெண் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த சித்தப்பாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்

மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி, கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பவித்ராவை (வயது 20) காதலித்து வந்தார்.இவர்களின் காதலுக்கு பெண் வீட்டினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதையும் தாண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜியின் பெற்றோரின் ஆதரவால் திருப்பரங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். புதுமணத்தம்பதிக்கு தலைதீபாவளி என்பதால் பவித்ரா கணவன் வீட்டின் முன்பு பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தார். அப்போது அவரது சித்தப்பா கார்த்திக் (42) அங்கு வந்தார்.

பெண்ணுக்கு தீ வைப்பு

அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை பவித்ராவின் உடலில் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றார். அதை கண்ட பாலாஜி மற்றும் அக்கம்பக்கத்தினர் கார்த்திக்கை தடுத்துள்ளனர்.மேலும் அக்கம்பக்கத்தினர் பவித்ராவின் உடலில் பற்றிய தீயை அணைத்து காப்பாற்றி சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணன் மகளை கொலை செய்ய முயன்ற கார்த்திக்கை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்