உசிலம்பட்டி அருகே உரக்கிடங்கில் குப்பையை கொட்டி எரிக்க எதிர்ப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே உரக்கிடங்கில் குப்பைகளை கொட்டி எரிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
உசிலம்பட்டி,
குப்பைகள்
உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகளை கொட்டி எரிக்கப்படுவதை தடுக்க கோரி அருகில் உள்ள உத்தப்பநாயக்கணூர், உ.வாடிப்பட்டி கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கைகள் எடுக்காமல் மீண்டும் மீண்டும் உரக்கிடங்கில் குப்பைகளை கொட்டி எரித்து வந்தனர்.
இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்துராணி, செல்லக்கண்ணு, உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமர், கவுன்சிலர்கள் காசி, சுதாகரன் மற்றும் கிராம மக்கள் இணைந்து உத்தப்பநாயக்கணூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தில் போராட்ட குழுவினருடன் உசிலம்பட்டி தாசில்தார் சுரேஷ், உசிலம்பட்டி நகராட்சி பொறுப்பு ஆணையாளர் கணேசன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாதிப்பு
அப்போது 10 தினங்களுக்குள் குப்பைகளை உரக்கிடங்கிலிருந்து அகற்றவும், இனிமேல் வரக்கூடிய குப்பைகளை முறையாக உரமாக மாற்றும் பணிகளை மேற்கொள்வது குறித்து கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.