பாபநாசத்தில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பாபநாசத்தில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பாபநாசத்தில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
நிவாரணம் வழங்க கோரிக்கை
பாபநாசம் பேரூராட்சி குப்பைமேடு பகுதியில் வழங்கப்பட்ட குடிமனைப்பட்டாவை ரத்து செய்து, சமுதாய கூடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும். பழைய பஸ் நிலையத்தில் நவீன கழிவறை கட்ட வேண்டும். வேம்பக்குடி கிராமத்துக்கு சுத்தமான குடிநீர், சுடுகாட்டுக்கு சாலை, தண்ணீர் வசதிகளை செய்து தர வேண்டும். பண்டாரவாடை கிராமத்தில் நெல் களத்துக்கு ெசல்லும் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்.
அங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
பேச்சுவார்த்தை
இதில் பங்கேற்றவர்கள் பிணம்போல் படுத்து கிடந்து ஒப்பாரி வைத்தனர். இந்த காத்திருப்பு போராட்டம் நேற்று 2-வது நாளாக நடந்தது. அப்போது தாசில்தார் அலுவலகம் வெளியே சமையல் செய்து சாப்பிட்டனர். இந்த நிலையில் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், ஒன்றிய செயலாளர் முரளிதரன் மற்றும் நிர்வாகிகளுடன் தாசில்தார் பூங்கொடி, துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மற்றும் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.