7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
கூட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானஅற்புதராஜ், குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாய தைனேஸ், சிங்கராயர், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், மாவட்ட துணை தலைவர்கள் மாலா, ஸ்டீபன், மாவட்ட துணை செயலாளர்கள் ஜான் அந்தோணி, அமலசேவியர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
போராட்டம்
கூட்டத்தில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு 1.1.2022 முதல் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும், அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட்டு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள் பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும், 50 ஆண்டு காலமாக உயர்கல்விக்கு ஆசிரியர்கள் பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்தப்படும்.
கண்டனம்
அதன்படி வருகிற 21-ந் தேதி வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், ஆகஸ்டு 13-ந் தேதி மாவட்ட தலைநகரில் தர்ணா போராட்டமும், செப்டம்பர் மாத இறுதியில் சென்னையில் போராட்டமும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் தற்போது நடைபெற்று வரும் மாவட்ட மாறுதலில் பணியிட மூப்பை கருத்தில் கொள்ளாமல் பணியேற்பு மூப்பை கருத்தில் கொண்டு முன்னுரிமை பட்டியல் வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவித்தல், புதிதாக தொடங்கப்பட்ட பள்ளிகளில் பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். சாக்கோட்டை ஒன்றியத்தில் ஓய்வு பெறவுள்ள ஆசிரியருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கைள உடனடியாக வழங்க வேண்டும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வருகிற 11-ந் தேதி சிவகங்கையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக ஆசிரியர்கள் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.