நீலகிரியின் இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டும்

உலக சுற்றுலா தின விழாவில், நீலகிரியின் இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் பேசினார்.

Update: 2022-09-27 18:45 GMT

ஊட்டி, 

உலக சுற்றுலா தின விழாவில், நீலகிரியின் இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் பேசினார்.

சுற்றுலா மறுசிந்தனை

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், உலக சுற்றுலா தின விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ-மாணவிகள் 9 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுற்றுலா மறுசிந்தனை என்ற கருப்பொருளுடன் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. தொழிலை மறுசீராய்வு செய்து மேம்படுத்த, இந்த கருப்பொருளை உலக சுற்றுலா நிறுவனம் அறிவித்துள்ளது.

இயற்கை எழில்

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கூடிய ஊட்டி மலைகளின் அரசியாக விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நீலகிரியின் இயற்கை எழில் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து, அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்து இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் பாலகிருஷ்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், உதவி சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ், அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் தாமரை மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விருதுகள்

முன்னதாக கலைப்பண்பாட்டுத்துறை சார்பில், கலை இளமணி விருது பெற்ற நாடுகாணியை சேர்ந்த பிரபாநேதாவுக்கு ரூ.4,000, ஓவியத்திற்காக கலை வளர்மணி விருது பெற்ற ஒட்டுப்பட்டரையை சேர்ந்த தினேசுக்கு ரூ.6,000, பரத நாட்டியத்திற்காக கலை சுடர்மணி விருது பெற்ற தாண்டான்டூ ரோடு பகுதியை சேர்ந்த சஸ்மிதா அரோராவுக்கு ரூ.10,000, கலை நன்மணி விருது குண்டுபெட் காலனியை சேர்ந்த கணேசனுக்கு ரூ.15,000, கவிஞருக்காக கலை முதுமணி விருது பெற்ற நாடுகாணியை சேர்ந்த நாகராசாவுக்கு ரூ.20,000-த்திற்கான காசோலைகள், சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்