ஏர்வாடி தர்கா பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ஏர்வாடி தர்கா பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆன்மிக சுற்றுலாத்தலமான ஏர்வாடி தர்காவிற்கும், பிச்சை மூப்பன் வலசை கடற்கரையில் அமைந்துள்ள படகு சவாரிக்கும் செல்ல தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய ஏராளமான சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மற்றும் வன உயிரின காப்பாளர் இயக்குனர் உத்தரவின் பேரில் ஏர்வாடி தர்கா நுழைவு வாயில் சுற்றுச்சூழல் மேலாண்மை குழு மற்றும் ஏர்வாடி ஊராட்சி மன்றம் இணைந்து சோதனை சாவடி அமைத்து அதன் மூலம் ஏர்வாடிக்குள் நுழையும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு கட்டணமாக சிறிய வாகனங்களுக்கு ரூ.20, பெரிய வாகனங்களுக்கு ரூ.50 வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு வசூல் செய்யும் தொகையை இப்பகுதியை சுத்தம் செய்யவும், சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது என சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல அலுவலர் பிரதாப் கூறினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ், துணை மண்டல அலுவலர்கள் அசரப் அலி, அய்யாசாமி, ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.