மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் மத்திய அரசின் "குப்பை இல்லா இந்தியா" என்ற திட்டத்தின் கீழ் "தூய்மையே சேவை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு ஊராட்சி தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏ.வி.சி. கல்லூரி என்.எஸ்.எஸ்.மாணவர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
தொடர்ந்து கல்லூரியின் முன்பு பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பேன், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவேன், மக்கும் குப்பையை வீட்டிலேயே உரமாக்கி வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்துவேன், நீர் நிலைகளை பாதுகாப்பேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ரஜினி நன்றி கூறினார்.