முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள்
பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசுகளை வழங்கினார்.;
பரிசளிப்பு விழா
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும கூட்டரங்கில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட தனி நபர், இரட்டையர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 1,500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
பதக்கங்கள்
முதல் இடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது. போட்டிகளில் முதல் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.ஆயிரமும் என மொத்தம் ரூ.41 லட்சத்து 58 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த பெரியம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வீராங்கனைகளுக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோர் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவும், உலக அளவில் விளையாட்டு போட்டிகளில் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை விளையாட்டு துறையில் செயல்படுத்தி வருகின்றனர்.
வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் மாநில அளவிலும் வெற்றி பெற வேண்டும். மாநில அளவில் வெற்றி பெற முடியாதவர்கள் அடுத்த முறை நாம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும். விளையாட்டை பொறுத்தவரை தொடர் பயிற்சி என்பது தான் நம்மை தயார்படுத்தும், உறுதிப்படுத்தும். அதற்காக நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்காக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இலச்சினையினை விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் முன்னிலையில் அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் கற்பகம் ஆகியோர் வெளியிட்டு அறிமுகப்படுத்தினர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி குழும செயலாளர் நீல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.