தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-18 18:30 GMT

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து 297 இளைஞர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பணியமர்வு ஆணையை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

'நான் முதல்வன்' திட்டத்தின் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை பெறுபவர்கள் தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 102 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில், 2,063 பேர் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் 297 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 512 பேர் 2-ம் கட்ட நேர்முக தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். மீதம் இருப்பவர்கள் வேலை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட தேவையில்லை. அடுத்தடுத்து நடைபெறுகின்ற வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன் அடையலாம். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுகின்ற வகையில் வேலைவாய்ப்பு துறையின் மூலமாக இதுபோன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இலக்குவன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், செந்துறை முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் செல்லம் கடம்பன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்