கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து : 30 மாணவ-மாணவிகள் படுகாயம்
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்தில் 30 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் அருகே தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களின் உதவியோடு காயம் அடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மாவட்ட எஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.