தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி

செம்பட்டி அருகே சுற்றுலா வேனும், காரும் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் நிதி நிறுவன மேலாளர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-03-26 19:00 GMT

நேருக்குநேர் மோதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரவீன் (வயது 38). இவர், தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் இவர், ஒட்டன்சத்திரத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

இதேபோல் சின்னாளப்பட்டியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் நேற்று தேவதானப்பட்டி அருகே உள்ள கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் வத்தலக்குண்டு வழியாக சின்னாளப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

செம்பட்டி அருகே, வத்தலக்குண்டு சாலையில் உள்ள கூலம்பட்டி பிரிவில் வந்தபோது சுற்றுலா வேனும், பிரவீனின் காரும் நேருக்குநேர் மோதின. இந்த விபத்தில் நிலை தடுமாறிய சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்தது.

மேலாளர் பலி

இதேபோல் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கிய பிரவீன் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுலா வேனில் வந்த சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் உயிரிழந்த பிரவீனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பிரவீனுக்கு திவ்யா (35) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்